அதிமுக தேர்தல் அறிக்கை

AIADMK Manifesto 2021

கோவை மாவட்ட மக்களுக்கான வாக்குறுதிகள்

 • கோவை மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள மிகப்பெரிய பேருந்து நிலைய பணிகள் துரிதப்படுத்தப்படும். 
 • கோவையில் துவங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • கோவையில் சர்வதேச அளவில் பெரிய ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
 • கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட்  விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
 • கோவையில் பிறந்து மக்களுக்கு பல்வேறு துறைகளில் சமூக தொண்டாற்றிய போயர் சமூக பெரியவர் திரு.கிருஷ்ணா போயர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்.
 • தொண்டாமுத்தூர் தொகுதி விவசாய நிலங்களையும் பயிர்களையும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வனத்துறை சார்பில் தனிப்படை ஒன்று அமைக்கப்படும்.
 • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசால் துவக்கப்பட்ட நீர்ப்பாசனக் கால்வாய்   திட்டங்களான அத்திக்கடவு-அவிநாசி, சரபங்கா, தாமிரபரணி-கருமேனியாறு, காவிரி-குண்டாறு, காவிரி உப வடிநில புனரமைப்பு, கல்லணைக் கால்வாய் புனரமைப்பு, கீழ்பவானி கால்வாய் புனரமைப்பு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எண்ணேகோல், ஜெர்த்தலாவ், அளியாளம் உள்ளிட்ட நீர் பாசனக் கால்வாய் திட்டங்கள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும்.
 • கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளின் தானியங்களை பாதுகாக்க உலகத்தரத்திலான ஒருங்கிணைந்த குளிர்சாதன கிடங்கு மற்றும் பதப்படுத்தப்படும் கூடங்கள் அமைக்கப்படும். இக்கூடங்களை கண்டறிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் விவசாயிகள் கிடங்கை சென்றடையும் வகையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
 • நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக சர்வதேச தரத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும்.
 • கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.
 • போயர் மக்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.

மகளிர் நல திட்டங்கள்

 • பெண்களின் பணிச்சுமையை குறைக்க குடும்ப தலைவிக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும்.
 • குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500/-  செலுத்தப்படும்.
 • குடும்ப தலைவிக்கு ஆண்டுதோறும் 6 சிலிண்டர்கள் இலவசம்.
 • அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும்.
 • குடும்ப அட்டைக்கான ரேஷன் பொருட்கள் உங்கள் வீடுகளுக்கே வந்து தரப்படும்.
 • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின், வைப்பு நிதியாக வழங்கப்பட்டு வந்த முதலீட்டுத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
 • அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
 • நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். 
 • திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக் கொலுசு, வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட அம்மா சீர்வரிசைப் பரிசு வழங்கப்படும்.

விவசாயிகள் நல திட்டங்கள்

 • விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சாரம் இலவசம்.
 • விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்.
 • விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500/- உழவு மானியம் வழங்கப்படும்.
 • நெல்லுக்கான உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.
 • வேளாண் அறிஞர் இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும். 
 • இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.
 • தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டு தென்னை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 • கால்நடைகளின் நலன், உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், அதன் மூலம், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வு சிறக்க, “கால்நடை வாரியம்” அமைக்கப்படும்.
 • மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வு மேற்கொண்டு நீர் மேலாண்மையை உறுதிப்படுத்துகிற வகையில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து, நீர் பாசன வசதிகளையும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், தேவையான இடங்களில் அணைக்கட்டுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
 • தடுப்பணைகள் மாநிலம் முழுவதும் உள்ள நதி, ஆறு, ஓடை போன்றவற்றில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

இளைஞர் நல திட்டங்கள்

 • அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதியாக வழங்கப்படும். 
 • படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வாழ்வாதார ஊக்கத் தொகை இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும்.
 • தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் லாபகரமான புதிய தொழில்கள் தொடங்க, குறைந்த வட்டியில் மானியத்துடன் மென்கடன் (Start-Up Loan) வழங்கும் திட்டம் தொடங்கப்படும். தொழில் தொடங்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் (Single Window System) 30 தினங்களில் தொழில் தொடங்க ஆணை வழங்கப்படும்.
 • அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்கள், அரசு ஆசிரியர்   பயிற்சிப் பள்ளியில் மீண்டும் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களில், விடுபட்டவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
 • ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா (Mini IT Park) உருவாக்கப்படும்.

மாணவர் நல திட்டங்கள்

 • மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்களைக் காக்கும் வகையில் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
 • கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
 • UPSC, NEET, IIT-JEE, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், உயர்தர பயிற்சி மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும்.
 • அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
 • உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
 • தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், விரிவுப்படுத்தி செயல்படுத்தப்படும்.
 • அரசு பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணாக்கர்களுக்கும் மடிக்கணினி சக மாணவர்களைப் போல வழங்கப்படும்.
 • சிறுபான்மை மக்களின் பெருவாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரால் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
 • தமிழ்நாட்டில் மேலும் ஐந்து புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.

கிறிஸ்துவ சகோதர்களுக்கான திட்டங்கள்

 • ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் 1000 பேருக்கு ரூ.37,000/- அரசு வழங்கும் திட்டத்தில் யாத்திரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்.
 • அனைத்து தேவாலயங்களிலும், பணியாற்றும் அடிப்படைப் பணியாளர்களான ஓசியார், கோயில்பிள்ளை, உபதேசியார் போன்றோரின் நலன் காக்க நல வாரியம் அமைக்கப்படும்.
 •  கிறிஸ்தவ ஆலயங்கள் பழுதடைந்து இருப்பின் அவற்றிற்கு தேவையான நிதி ஒதுக்கி செப்பனிடப்பட்டு, புனரமைப்பு செய்யப்படும்.
 • ஜெர்மானிய தமிழ் அறிஞர் சீகன் பால்கு அவர்கள் நினைவாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, அங்கு “பொது நூலகம்” அமைக்கப்படும்.
 • கிறிஸ்தவர்கள் இயற்கை எய்தும் போது அவர்களுடைய உடலை அடக்கம் செய்ய  தேவையான இடங்களை கண்டறிந்து போதுமான இடத்தை விலையில்லாமல் அளிக்கும்.

இஸ்லாமிய சகோதர்களுக்கான திட்டங்கள்

 • இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்திற்கு செல்ல அரசால் வழங்கப்படும் மானியம் 6 கோடியை உயர்த்தி 10 கோடி ரூபாய் வழங்கப்படும். 
 • இஸ்லாமிய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக  கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். 
 • திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் முஸ்லிம் சமூதாயத்திற்கான இஸ்லாமிய அறிவுசார் கருத்துக்களை எளிமையாக வழங்கிய அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி நினைவைப் போற்றும் விதமாக, இஸ்லாமிய அறிஞர் அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களின் பெரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், தமிழக அரசின் சார்பில் “அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய இலக்கிய கருவூலம்” ஒன்று உருவாக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அதற்கென்று தனி உள்அரங்கத்தோடு கூடிய நூலக கட்டிடம் உருவாக்கப்படும்.
 • இஸ்லாமிய மக்களின் உடலை அடக்கம் செய்ய  தேவையான இடங்களை கண்டறிந்து போதுமான இடத்தை விலையில்லாமல் அளிக்கும்.

இந்து சகோதர்களுக்கான திட்டங்கள்

 • கிராம ஊர் கோயில்களில் பூஜை செய்யும் கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.2,000/- வழங்கப்படும். மேலும், வருமானம் இல்லாத அனைத்து மத கோயில்களுக்கும் இலவச ஒரு விளக்கு திட்டம் அமல்படுத்தப்படும்.
 • திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். 
 • இந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோருக்கு, கயிலை மலை – மானசரோவர், நேபாள நாட்டின் – முக்திநாத், ஹரித்துவார், ஜம்மு-காத்ரா வைஷ்ணவ தேவி திருக்கோயில் ஆகிய ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்று வர பயண சலுகை கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.

ஆதித்தமிழர் மற்றும் பழங்குடியினர் சகோதரர்களுக்கான திட்டங்கள்

 • தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
 • ஆதிதிராவிடர் மக்களின் பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகள் அரசால் கட்டித்தரப்படும்.
 • மாநில அளவிலான “தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்” விரைவில் அமைக்கப்படும்.
 • தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்ட நிதி, அவர்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில், சிறப்பு தனிச் சட்டம் இயற்றப்படும்.
 •  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு கூறுகள் திட்ட நிதி அவர்களுக்கு முழுமையாக சேரும் விதமாக சிறப்பு தனிச் சட்டம் இயற்றப்படும்.

தமிழ் மொழி வளர்ச்சி  திட்டங்கள்

 • இந்திய அரசின் ஆட்சி மொழியாக உயர்தனி ஆதிமொழியான தமிழ் மொழியை அறிவித்து நடைமுறைப்படுத்திட மத்திய அரசை அ.இ.அ.தி.மு.க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.
 • தமிழ் கட்டாயப்பாடம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயப் பாடமாக்கப்படும்.  
 • மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்திட மைய அரசை வலியுறுத்துவோம். 
 • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
 • மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும். 
 • தமிழ்நாட்டில் இயங்கும் மைய அரசு / அரசு சாரா நிறுவனங்களில், “தமிழ் மொழியில் அறிவிப்புகளை” (Announcements) வெளியிடவும், தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கவும் வலியுறுத்தப்படும். 
 • தற்போது உள்ள நடைமுறைப்படி பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நிதியுதவி வழங்கப்படும். மேலும், 25 சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 • தமிழரின் தொன்மையை பறைசாற்றும், சிவகங்கை மாவட்டம் – கீழடி, தூத்துக்குடி மாவட்டம் – ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகலை, ஈரோடு மாவட்டம் – கொடுமணல், அரியலூர் மாவட்டம் – கங்கைகொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம் – பட்டறை பெரும்புதூர், இராமநாபுரம் மாவட்டம் – அழகன்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் – மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் 

 • ஏழை, எளிய நடுத்தர மக்கள் அனைவரும் நிதி சேவைகளை பயன்படுத்தும் வகையில் வழங்கப்படும். இத்திட்டமானது, அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை சுலபத் தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், அவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இத்திட்டம் வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
 • கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கடன் பெற்று வீடுகட்டியவர்களின் நிலுவைக்கடன் மற்றும் அடமானக் கடனை என்ற அடிப்படையில் கடன் தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
 • கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
 • குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு “அம்மா இல்லம் திட்டம்”, மூலம் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
 • அம்மா பசுமை வீடு திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.2,43,000/-லிருந்து ரூ.3,40,000/- ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.